நெல் சாகுபடி வரலாறு
நெல் சாகுபடி வரலாறு
நெல் அல்லது அரிசி என்பது புல் வகையை சேர்ந்த ஒரு தாவரமாகும். இது தென்கிழக்காசியாவில் தோன்றியது. இது ஈர நிலங்களில் வளரக்கூடிய நெற்பயிர் சராசரியாக ஐந்து மாதங்கள்வரை வளரக் கூடிய ஓர் ஆண்டு தாவரமாகும். இப்பயிரின் விதை உமி என அழைக்கப்படும் மேலுறை நீக்கப்பட்ட பின் உணவாகப் பயன்படுத்தப்படுகிறது. இவ்வாறு மேலுறை நீக்கப்பட்ட விதை அரிசி என்று அழைக்கப்படுகிறது. ஆனால் அரிசிக்கு முளைக்கும் திறன் கிடையாது. நெல், சோளம், கோதுமைக்கு அடுத்து அதிக பயிரிடப்படும் தானியம் ஆகும்.
உலகின் முதல் பயிர்:
உலகில் முதன்முதலாக ஆசிய நெல், ஆப்பிரிக்க நெல் என இருவகை நெற்பயிர்கள் பயிரிடப்பட்டன. ஆசியாவில் நெல் சாகுபடி கி.மு 4500க்கு முன்பாகவே பல நாடுகளில் ஒரே சமயத்தில் துவங்கியதாகக் கருதப்படுகிறது.
மேற்கூறிய இருவகை நெல் இனங்களின் பொதுவான முன்னோடி காட்டு நெல் இனம் ஆகும். ஆசியா நெல், சிற்றினம். இமயமலை அடிவாரத்தில் தோன்றியதாகக் கருதப்படுகிறது. இந்தியாவில் ஒளவையார் மற்றும் பல பழம்பெரும் புலவர்கள் பாடிய நெல் மற்றும் அரிசி பற்றிய பாடல்கள் பல உள்ளன.
வரலாறு:
நெல் விளையும் பகுதிகளில், நெல் நடுதல், அறுவடை போன்ற காலத்தையொட்டி பண்டிகைகளும் கொண்டாடப்படுகின்றன. நெல் பற்றிய சில சமஸ்கிருத குறிப்புகளும் உள்ளன. சீனாவில், விவசாயம், நெல் ஆகிய இரண்டையும் குறிக்கும் சொல் ஒன்றே ஆகும். ஆப்பிரிக்காவில் நெல் சுமார் கி.மு 1500 முதல் பயிரிடப்பட்டு வருகிறது. நைகர் நதித்துவாரத்தில் பயிரிடப்பட்டு, பின் செனெகல் நாடுவரை பரவியது. எனினும் இதன் சாகுபடி மேற்கொண்டு பரவவில்லை.
அரேபியர்களால் கி.பி 7ம் நூற்றாண்டுகளில் அறிமுகப்படுத்தப்பட்ட ஆசிய நெல் இனங்கள் பயிரிடப்பட்டன. ஜப்பானில் நெற்பயிர் சீனாவிலிருந்து அறிமுகப்படுத்தப்பட்டது என ஒரு சிலர் நம்புகின்றனர். ஆனால் ஜப்பானியர்கள் முன்னாளில் நீளமான தண்டுடைய, நீரில் வளரும் நெற்பயிர்களை படகில் சென்று அறுவடை செய்ததாக சில குறிப்புகளும் உள்ளன. உலர்நில (மானாவாரி) நெல் சாகுபடி கி,மு 300ல் தற்கால நீர்நில சாகுபடிமுறை அறிமுகப்படுத்தப்பட்டது.
ஆசிய நெல் இனம், மத்திய கிழக்கு நாடுகளிலும், மத்திய தரைக்கடல் பகுதிகளிலும் சுமார் கி.மு. 800ல் பயிரிடப்பட்டது. மௌரியர்கள், நெற்பயிரை ஸ்பெயின் நாட்டுக்கு அறிமுகப்படுத்தினர். 15ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நெல், இத்தாலி, பிரான்ஸ் நாடுகளுக்கும் பின்னர் எல்லா கண்டங்களுக்கும் பரவியது.
அமெரிக்காவின் தென் கரோலினா மாகாணத்தில், மடகாஸ்கரிலிருந்து நெல் அறிமுகமானது. புயலால் பாதிப்படைந்து சார்லஸ்டன் என்ற துறைமுகத்துக்கு வந்த கப்பலின் தலைவர் ஒரு நெல் மூட்டையை அங்குள்ள விவசாயிகளுக்கு அன்பளிப்பாக கொடுத்தார். அவர்கள் அதனை பயிரிடத் தொடங்கினர்.
தென் அமெரிக்காவில் நெல் 18ம் நூற்றாண்டில் ஸ்பெயின் நாட்டவரால் அறிமுகப்படுத்தப்பட்டது. முந்தைய அமெரிக்காவின் தென் கரோலினா, ஜார்ஜியா மாகாணங்கள், மேற்கு ஆப்பிரிக்காவிலிருந்து கொண்டு வரப்பட்ட கறுப்பின அடிமைகள் மூலம் நெல், பயிர் செய்து மிக அதிக இலாபம் ஈட்டினர். இவ்வடிமைகளுக்கு முன்னமே நெல் பயிர் பற்றிய அறிவு இருந்ததால், அதிக விலை கொடுத்து வாங்கப்பட்டனர். நில முதலாளிகள் அடிமைகளிடமிருந்து பாத்தி கட்டுதல், நீர் தேக்குதல் போன்ற உத்திகளை தெரிந்து கொண்டனர். முதலில் அமெரிக்காவில், நெல் கையால், (மர உலக்கைக் கொண்டு) குத்தப்பட்டு, பின் கூடைகளில் புடைக்கப்பட்டு அரிசி பிரித்தெடுக்கப்பட்டது.
இந்த உத்திகளையும் ஆப்பிரிக்க அடிமைகளே அறிமுகப்படுத்தினர். பின்னர் 1787ல், நீரால் இயங்கும் அரிசி அரவை இயந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டு நெல் சாகுபடி நல்ல லாபம் ஈட்டியது. 20ம் நூற்றாண்டில், அமெரிக்க உள்நாட்டு போருக்குப்பின் அடிமைகள் இல்லாமையால் நெல் சாகுபடி குறைந்துவிட்டது.
அறுவடை செய்யப்பட்ட நெல்லைப் பாதுகாப்பாக சேமித்து வைக்க பெரிய மண் பானைகள், பத்தாயம் அல்லது குதிர் எனும் மரப்பலகைகளால் செய்யப்பட்ட அமைப்பு மற்றும் செங்கற்கள் கொண்டு அமைக்கப்பட்ட நெற்களஞ்சியங்கள் ஆகியவை பண்டைய நாட்களில் இருந்தன. 600 ஆண்டு பழமையான நெற்களஞ்சியங்கள் பல இந்துத் திருக்கோயில்களில் அமைந்துள்ளன. திருவரங்கம், திருவானைக்கால், அழகர்கோயில், தஞ்சாவூர், பாபநாசம், திருப்பாலத்துறை போன்ற திருக்கோயில்களில் இத்தகைய நெற்களஞ்சிய்ங்கள் உள்ளன.
நமது நெல்லைக் காப்போம் என்பது இந்தியாவில் பாரம்பரிய விதை நெல்களைக் காக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டு இருக்கும் ஓர் அமைப்பு ஆகும். இந்த அமைப்பு பல்வகை விதை நெல்களைக் காப்பது தொடர்பான செய்திகளை பரப்புவது, அதை செயல்படுத்த ஒரு உழவர் வலைப்பின்னல், (விவசாய இணையத்தளம்) இயற்கை வேளாண்மை ஊக்குவிப்பு போன்ற பணிகளை செயல்படுத்தி வருகிறது.
விதை நெல்கள் பாதுகாக்கப்பட அவை பயிரப்பட வேண்டும். அதற்காக இவர்கள் அரிய விதை நெல்களை சேகரித்து, அதில் இருந்து விவசாயிகளுக்கு 2 கிலோ நெல்லை இலவசமாகத் தருவர். விவசாயிகள், அதைப் பயிரிட்டு 4 கிலோ ஆக அடுத்த ஆண்டு திருப்பித்த தர வேண்டும்.
உலக நெல் உற்பத்தி 1960ம் ஆண்டில் 20 கோடி டன்களிலிருந்து சீராக உயர்ந்து 2004ல் 60 கோடி டன்களாய் இருந்தது. அரிசி உற்பத்தி நெல் அளவில் சரரசரியாக 68 சதவீதம் ஆகும். 2004ல் சீனா 31 சதவீதம், இந்தியா 20 சதவீதம் மற்றும் இந்தோனேஷியா 9 சதவீதம் உலக நெல் உற்பத்தியில் முன்னிலை வகித்தன. உலக அளவில் மிக சிறிதளவே உற்பத்தில் 6 சதவீதம் நெல் ஏற்றுமதி ஆகிறது.
ஏற்றுமதியில் தாய்லாந்து 26 சதவீதம், வியட்நாம் 15 சதவீதம், அமெரிக்கா 11 சதவீதம் முன்னிலை வகிக்கின்றன. இந்தோனேஷியா, வங்கதேசம், பிரேசில் ஆகிய நாடுகள் அதிக அளவில் நெல் இறக்குமதி செய்கின்றன.
குறிச்சொற்கள்: