பப்பாளி சாகுபடி
பப்பாளி சாகுபடிக்கு விருப்பமா.. ஹைப்ரிட் மருத்துவ குணம் உள்ள ரகத்தை முயற்சி பண்ணுங்க.. நல்ல டிமாண்ட்
உளுந்துார்பேட்டை அருகே விவசாயிகள் அதிகளவில் ஹைப்ரிட் வகையை சேர்ந்த மருத்துவ குணம் கொண்ட பப்பாளி பழங்களை சாகுபடி செய்வதில் ஆர்வம் காட்டுவதோடு வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து வருகின்றனர். உளுந்துார்பேட்டை அருகே செம்மணங்கூர் கிராமத்தில் 3 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் உள்ள விளை நிலங்களில், விவசாயிகள் பெருமளவு, நெல், சோளம், காய்கறி பொருட்களை சாகுபடி செய்துள்ளனர். இதற்கு அடுத்தபடியாக, ஹைப்ரிட் வகையை சேர்ந்த மருத்துவ குணம் கொண்ட பப்பாளி பழங்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மனிதனின் உடலில் புரதச் சத்துக்களை அதிரிக்க கூடிய பழங்களில் ஒன்றாகும் இது.
கைக்கு எட்டும் உயரம்
இந்த பப்பாளி பழங்களின் மரங்கள் நீண்டு வளராமல், சிறிய மரத்திலே அதிகளவில் பழங்களை தரும் வகையில் காய்த்துள்ளது. 2 ஆண்டுகள் வரை அறுவடைக்கு காத்திருக்க வேண்டிய இந்த பப்பாளி பழங்களுக்கு, 24 மணி நேரமும் தண்ணீர் பாய்ச்சி கொண்டிருக்க வேண்டிய சூழல் உள்ளது. இதையொட்டி, விவசாயிகள் வேளாண்மை துறை மூலம் சொட்டுநீர் பாசனத்தின் உதவியோடு, இந்த ஹைப்ரிட் வகை பப்பாளி சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர்.
ஒரு கிலோ 10 ரூபாய்
ஒரு ஏக்கர் நிலத்தில் பப்பாளி பழங்கள் சாகுபடி செய்வதற்கு, 1.50 லட்சம் ரூபாய் வரை செலவாகிறது. இந்த பழங்கள் அறுவடை காலத்தில் சீசனுக்கு தகுந்தபடி கிலோ 7 முதல் 10 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்த பப்பாளி மரங்கள் அனைத்திற்கும் காற்றை தாங்ககூடிய சக்தி இல்லை. பலத்த காற்று வீசினால் இந்த மரங்கள் அனைத்தும் சாய்ந்து சாகுபடி செய்த விவசாயிக்கு நஷ்டம் ஏற்படும் சூழலும் உள்ளது.
சென்னை, பெங்களூர்
செம்மணங்கூர் கிராமத்தில் மட்டும் சுமார் பல ஏக்கர் பரப்பளவில் அறுவடைக்கு தயாராகியுள்ள இந்த பழங்கள், இங்கிருந்து உள்ளூர் மார்கெட் மட்டுமின்றி, சென்னை, திருச்சி, பெங்களூர், ஆந்திரா, கேரளா மாநிலங்களுக்கும், மலேசியா, சிங்கப்பூர், சுவிடன் உள்ளிட்ட அயல்நாடுகளுக்கு பாதுகாப்புடனான பேக்கிங் மூலம் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
நோய் எதிர்ப்பு சக்தி
கடந்த சில ஆண்டுகளாக டெங்கு, பன்றி காய்ச்சல் என பல்வேறு வகையான நோய்கள் மக்களைத் தாக்கி வந்த நிலையில், தற்போது கொரோனா பெருந்தொற்று மக்களை அச்சுறுத்தி வருகிறது. இதனிடையே நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ள பப்பாளிப் பழத்திற்கு தற்பொழுது அதிக அளவில் மவுசு கூடி வருகிறது.
வியாபாரம் அருமை
அறுவடை செய்யப்பட்டுவரும் பப்பாளி பழங்கள், உளுந்தூர்பேட்டை, கள்ளக்குறிச்சி, விருத்தாசலம், விழுப்புரம் உட்பட பல்வேறு நகரங்களிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், பப்பாளி பழத்தின் வியாபாரம் களை கட்டி உள்ளதால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அது மட்டுமின்றி, ஒரு சில விவசாயிகள், பப்பாளி சாகுபடியில் நஷ்டம் ஏற்பட்டால், அதை சமாளிக்கும் ஊடு பயிர்களாக கொய்யா, எலுமிச்சை, முருங்கை உள்ளிட்டவற்றையும் சாகுபடி செய்து வைத்துள்ளனர்.
குறிச்சொற்கள்: