School Reopen: ஜூன் 9ஆம் தேதிக்கு தள்ளிப்போகும் பள்ளிகள் திறப்பு? தமிழ்நாடு அரசு கொடுத்த விளக்கம்!
School Reopen: ஜூன் 9ஆம் தேதிக்கு தள்ளிப்போகும் பள்ளிகள் திறப்பு? தமிழ்நாடு அரசு கொடுத்த விளக்கம்!
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு ஜூன் 9ஆம் தேதிக்கு தள்ளிப் போவதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகின்றன. தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்த உண்மையான தகவலை தமிழ்நாடு தகவல் சரிபார்ப்பகம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.
கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்புக்கு தயாராகி வருகின்றன. இன்னும் இரண்டு நாட்களில் கோடை விடுமுறை நிறைவடைய உள்ள நிலையில், ஒரு தகவல் சமூக வலைதளங்களில் பரவியது. அதுகுறித்து தமிழக அரசின் விளக்கம் வெளிவந்துள்ளது.
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 2 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்தது. அதேசமயம் கோடை வெயில் வாட்டி வந்ததால், பள்ளிகள் திறப்பு தள்ளி போகலாம் என்று செய்திகள் வெளியாகின. இதுதொடர்பாக முதல்வரிடம் பேசி முடிவெடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியிருந்தார்.
இந்தநிலையில் தென்மேற்கு பருவமழை தொடங்கி மழை பெய்து வருவதால் தமிழகத்தில் குளிர்ந்த வானிலை நிலவுகிறது. இதனால் திட்டமிட்டப்படி ஜூன் 2 அன்று பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவித்த அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டிருந்தார்.
பள்ளிகள் திறக்கப்பட்டதும் மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்க தமிழ்நாடு பாடநூல் கழகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. ஜூன் 3ஆம் தேதி கலைஞர் பிறந்தநாளை முன்னிட்டு பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை விரிவுபடுத்த அரசு திட்டமிட்டுள்ளது.
நகரங்களில் வசிக்கும் பிள்ளைகள் கோடை விடுமுறைக்கு சொந்த ஊர்களுக்கும், வெளியூருக்கும், உறவினர்கள் வீடுகளுக்கும் சென்ற குழந்தைகளும் பெற்றோர்களும் சொந்த ஊர் கிளம்பி கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் இன்று காலை முதல் சமூக வலைதளங்களில் ஒரு செய்தி பரவி வருகிறது. அதில், 'ஜூன் 2ஆம் தேதிக்கு பதில் ஜூன் 9ஆம் தேதிதான் பள்ளிகள் திறக்கப்படும் என அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்' என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இது மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்புக் குழு விளக்கம் அளித்துள்ளது. தமிழ்நாட்டில் பள்ளிகள் ஜூன் 9ஆம் தேதி திறப்பதாகப் பரப்பப்படுவது வதந்தி என்று தெரிவித்துள்ளது. இதனால் ஜூன் 2ஆம் தேதி பள்ளிகள் திறப்பது உறுதியாகியுள்ளது.
குறிச்சொற்கள்: