இந்திய தேசிய நீர் விலங்கு
இந்திய தேசிய நீர் விலங்கு
இந்தியாவின் தேசிய விலங்கு புலி என்றும், தேசிய பறவை மயில் என்றும், அனைவருக்கும் தெரியும். இந்திய தேசிய நீர் விலங்கு டால்பின். அத்தகைய டால்பினைப் பற்றி நாம் தெரிந்துகொள்வோம்.
கடலில் துள்ளி விளையாடும் டால்பினைப் பற்றி கேள்விபட்டிருப்பீர்கள். சிலர் பார்த்தும் இருக்கலாம். இராமேஸ்வரத்திற்கு அருகில் இருக்கும் குருசடை தீவுக்கு அருகே டால்பின்களை நிறைய பார்ப்பதாக மீனவர்கள் சொல்கிறார்கள்.
கடலில் மூழ்கிக் கொண்டிருந்தவர்களை டால்பின்கள் காப்பாற்றியதாக கதைகள் கூட கேள்விப் பட்டிருக்கலாம். அது நிஜமாகக் கூட இருக்கலாம். ஏனெனில் மனிதனுக்கு பிறகு உயிரினங்களில் பகுத்தறிவோடு வாழும் விலங்கு டால்பின் என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள்.
நாய்கள், யானைகள், போன்று மனிதனோடு ஒன்றிவாழும் உயிரினம் இது. நமது நாட்டில் தேசிய நீர்வாழ் விலங்காக அறிவிக்கப்பட்டிருப்பது கடலில் வாழும் டால்பின்கள் அல்ல. நதிநீரில் வாழும் டால்பின்கள் ஆகும். இவை கடல் டால்பின்களை காட்டிலும் உருவம், அளவு, குணத்திலும் நிறைய வேறுபட்டு காணப்படும்.
இவை நீர் மாசுமாடு, மற்றும் மனிதனின் வேட்டையாடுதல் இவை காரணமாக இந்த உயிரினம் குறைந்து கொண்டே வருகிறது. இந்த வகை டால்பின்களுக்கு பார்வை குறைபாடு உண்டு. சிலவற்றிற்கு சுத்தமாக கண்ணே தெரியாது. எனவே ஆபத்து அறியாமல் வாழும் இடங்களில் திட்டுகளில் மோதி இறந்து விடுகின்றன.
குறிப்பாக மனிதர்கள் பயன்படுத்தும் படகுகளிலும், மீன்வலைகளிலும் மாட்டிக்கொண்டு உயிர் இழக்கின்றன. இந்தியாவில் சிந்து, கங்கை, பிரம்மபுத்திரா ஆகிய வற்றாத நதிகளில் இப்போது நூற்றுக்கும் குறைவான எண்ணிக்கையில் மட்டுமே டால்பின்கள் வாழ்கின்றன. முன்பு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் கங்கை, பிரம்மபுத்திரா நதிகளில் மிகக் குறைந்த அளவே டால்பின்கள் இருந்தன.
கங்கையில் வாழும் டால்பினை ‘சூசு’ எனவும், சிந்து நதியில் வாழும் டால்பினை ‘புலான்’ என்றும் அழைக்கப்படுகிறது. இந்திய நதிநீர் டால்பின்கள் பொதுவாக பழுப்பு மற்றும் கருப்பு நிறத்தில், நீண்ட மூக்கோடு, பெரிய தலையோடு காணப்படும். அதிகபட்சமாக எட்டடி நீளம், சராசரியாக 100 கிலோ எடை, மேல் தாடையிலும், கீழ்தாடையிலும், மிகக் கூர்மையான 28 பற்கள் உண்டு.
இருபுறமும் அகலமான துடுப்பு போன்ற இறக்கைகள் உண்டு. திமிங்கலத்தை போலவே இவையும் பாலூட்டி இனம். நுரையீரல் மூலமாகவே சுவாசிக்கிறது. முப்பது முதல் 50 நொடிகளுக்கு ஒருமுறை நீர்மட்டத்திற்கு மேலே வந்து சுவாசித்துவிட்டுச் செல்லும். இவற்றின் கர்ப்ப காலம் ஒன்பது மாதங்கள்.
புதிதாக பிறக்கும் டால்பின் குட்டிகள் 65 செ.மீ. நீளம் இருக்கும். குட்டியாக இருக்கும் போது தாய்ப்பாலும், வளர்ந்த பிறகு சிறு மீன்கள், மற்றும் இறால்களை உணவாக எடுத்துக் கொள்ளும். நதிநீர் டால்பின்கள் சராசரியாக முப்பத்தைந்து ஆண்டுகள் உயிர் வாழும். பார்வை குறைபாடு இவைகளுக்கு இருப்பதால் கடல் டால்பின்களை போல பயிற்சியளித்து மனிதர்கள் பயன்படுத்த முடியாது.
கடல் டால்பின்கள் அமெரிக்க ராணுவத்தில்கூட உளவுப் பணியாற்றுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. எல்லா டால்பின்களுக்கும் ஒலியலைகளை கிரகித்துக்கொள்ளக்கூடிய தன்மை உண்டு. நீரில் வாழும் பாலூட்டிகளில் டால்பின்கள் மட்டுமே இந்த சிறப்பினை பெற்றிருக்கின்றன. ஒலி அலைகளை உணர்வதின் மூலமாகவே இவை இரை தேடுகின்றன.
டால்பின்களால் 2,00,000 ஹெர்ட்ஸ் அளவுக்கான அல்ட்ரா சோனிக் ஒலியலைகளை ஏற்படுத்த முடியும். (மனிதர்களது காது 18,000 ஹெர்ட்ஸ் அளவுக்கே கேட்கும் சக்தி கொண்டது). பார்வை குறைப்பாட்டை ஒலிகள் மூலமாகவே டால்பின்கள் தவிர்க்கின்றன.
உலகின் அழிந்து வரும் உயிரினங்களில் ஒன்றாக இருப்பதால், இவற்றைக் காக்கும் பொருட்டு, பீகார் முதல்வர் நிதிஷ் குமாரின் கோரிக்கையை, ஏற்றுக்கொண்ட மத்திய அரசு வனத்துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷால் அதிகாரபூர்வமாக டால்பின் தேசிய நீர்வாழ் விலங்காக அறிவிக்கப் பட்டிருக்கிறது. பெரும்பாலும் மருத்துவத்திற்கு தேவைப்படும் மீன் எண்ணெய் தயாரிக்கவே இவை வேட்டையாடப்படுகின்றன.
இந்திய வன உயிரின பாதுகாப்புச் சட்டத்தின் படி இறைச்சிக்காகவோ, வேறு எதற்காகவும் அதை வேட்டையா டும் பட்சத்தில் வேட்டையாடுபவர்கள் மீது சட்டம் கடுமையான தண்டனை அளிக்கும் என்று அறிவித்துள்ளது. வேட்டையாடுபவர்களுக்கு ஒன்று முதல் ஆறு வருடங்கள் வரை சிறைதண்டனையும், அபராதமும் விதிக்கப்படும்.
குறிச்சொற்கள்: