சென்னையில் கடுமையான பனிமூட்டம் மின்சார ரயில், விமான சேவைகள் பாதிப்பு! பயணிகள் அவதி
சென்னையில் கடுமையான பனிமூட்டம் மின்சார ரயில், விமான சேவைகள் பாதிப்பு! பயணிகள் அவதி
சென்னையில் இன்று காலை கடும் பனிமூட்டம் நிலவியது. இதனால் சென்னை புறநகர் மின்சார ரயில் சேவையில் தாமதம் ஏற்பட்டது. வழக்கமான அட்டவணைபடி இயங்காமல், மின்சார ரயில்கள் 10 நிமிடங்கள் வரை தாமதமாக இயக்கப்பட்டன. எதிரில் வரும் ஆட்களே தெரியாத அளவுக்கு பனிமூட்டம் இருந்ததால் சென்னை கடற்கரை - செங்கல்பட்டு ரயில் சேவை பாதிக்கப்பட்டது. பனிமூட்டத்தால் சென்னையில் விமான சேவையும் பாதிக்கப்பட்டது. சோழிங்கநல்லூர், பெரும்பாக்கம், சித்தலபாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் கடும் பனிமூட்டம் நிலவியது. இதனால் வாகன ஓட்டிகளும் சிரமமடைந்தனர்.
வடகிழக்கு பருவமழை விலகினாலும், தமிழகத்தில் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்து வருகிறது. எனினும் காலை மற்றும் இரவு நேரங்களில் பனிமூட்டம் நிலவுகிறது. குறிப்பாக காலை நேரத்தில் கடும் பனிமூட்டம் நிலவுகிறது. இதனால் குளிர் வாட்டி வதைக்கிறது.
இந்த நிலையில் இன்று வழக்கத்தைவிட பனி அதிகமாக நிலவியது. குறிப்பாக தலைநகர் சென்னையில் வழக்கத்தை விட இன்று கடும் பனிமூட்டம் நிலவியது. சோழிங்கநல்லூர், பெரும்பாக்கம், ஈசிஆர் சாலை, சித்தலபாக்கம், மேடவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பனிமூட்டம் சூழந்து காணப்பட்டது. ஒரே புகை மண்டலம் போல் காட்சியளித்தது. இதனால் எதிரே சாலையில் வருபவர்களை கூட காண முடியாத சூழல் இருந்தது. வாகன ஓட்டிகள் சிரமமடைந்தனர். இந்த நிலையில் புறநகர் மின்சார ரயில் சேவையும் பாதிக்கப்பட்டது.
வழக்கமான அட்டவணைபடி இயங்காமல், 10 நிமிடங்கள் வரை மின்சார ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டன. சென்னை கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடத்தில் மின்சார ரயில்கள் 10 நிமிடங்கள் வரை தாமதமாக இயக்கப்பட்டன. இதனால் காலையிலேயே பணிக்கு புறப்பட்ட பயணிகள் சிரமமடைந்தனர். இதேபோல் பஸ், மோட்டார் சைக்கிள்கள், கார்களை ஓட்டிய வாகன ஓட்டிகளும் முகப்பு விளக்கை எரியவிட்டபடியே சென்றனர்.
இதேபோன்று சென்னையில் நிலவிய கடும் பனிமூட்டத்தால் விமான சேவையும் பாதிக்கப்பட்டது. சென்னை விமான நிலையத்தில் இருந்து இன்று காலை புறப்பட வேண்டிய மும்பை உள்ளிட்ட 5 விமானங்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டது.
குறிச்சொற்கள்: