பருத்தி பஞ்சு விலை உயர்வால் தடுமாறும் பஞ்சாலைகள்.. பதுக்கலா..? பற்றாக்குறையா..?
பருத்தி பஞ்சு விலை உயர்வால் தடுமாறும் பஞ்சாலைகள்.. பதுக்கலா..? பற்றாக்குறையா..?
பருத்தி எங்கெல்லாம் பதுக்கி வைக்கப்பட்டு இருக்கின்றது என்பது குறித்தும் அதற்கான காரணங்கள் குறித்தும் விசாரிக்க வேண்டும். பருத்தி பஞ்சு விலை தொடர்ந்து உயர்ந்து வருவதன் காரணமாக தென்னிந்தியாவின் மான்செஸ்டரான கோவையில் பஞ்சாலை தொழில் கடும் நெருக்கடியில் சிக்கி தவிக்கின்றது. பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பஞ்சாலை உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பஞ்சாலைகள் அதிகம் கொண்ட மாவட்டம் என்பதால் தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என கோவை அழைக்கப்படுகின்றது. சமீபகாலமாக பஞ்சு விலை கட்டுப்பாடின்றி உயர்ந்து வருவதன் காரணமாக தென்னிந்தியாவின் மான்செஸ்டர் நகரம் கடும் நெருக்கடியில் தடுமாறி வருகின்றது.
பஞ்சாலைகளுக்கு வாங்கப்படும் 356 எடை கொண்ட ஒரு கேண்டி பஞ்சு 86 ஆயிரம் ரூபாயாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 43 ஆயிரம் ருபாய்க்கு விற்பனையான ஒரு கேண்டி பஞ்சு தற்போது 86 ஆயிரத்துக்கு விற்பனையாவதால் பஞ்சாலை உரிமையாளர்கள் கடும் நெருக்கடியில் சிக்கி தவித்து வருகின்றனர்.
இந்த அபரிமிதமான விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இல்லை எனில் நூல் விலை ஏறுவதுடன் பின்னலாடை, காடா துணி உற்பத்தி விலையும் அதிகரிக்கும் எனவும் பஞ்சாலை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்த விலையேற்றத்துக்கு பதுக்கல் காரணமா அல்லது உண்மையிலேயே பஞ்சு பற்றாகுறையா என்பதுதான் சந்தேகமே எனவும் பஞ்சாலை உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
பருத்தியின் இந்த அசாதாரணமான விலை உயர்வு கடந்த 10 ஆண்டுகளில் சந்திக்காதது என தெரிவிக்கும் இந்திய ஜவுளிதொழில் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பிரபு தமோதரன்,பஞ்சு விலை ஏற்றம், நுகர்வு குறைவு போன்றவற்றால் விலை ஏற்றம் ஏற்பட்டு கடும் நெருக்கடி ஏற்படும். கடந்த 60 நாட்களில் மட்டும் 12 ஆயிரம் ரூபாய் விலை உயர்வு ஏற்பட்டு இருக்கின்றது.
வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பஞ்சுக்கு 11 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது. இந்த வரியை நீக்கினால் 8 ஆயிரம் வரை விலை குறையும். இந்த விலை ஏற்றம் அதிகரிக்க யூக வணிகம் முக்கிய காரணம் , யூக வணிகத்தில் இருப்பவர்கள் தினமும் பஞ்சு விலையை ஏற்றிக்கொண்டு இருக்கின்றனர் என இந்திய ஜவுளித்தொழில் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பிரபு தாமோதரன் தெரிவித்தார்.
பருத்தி எங்கெல்லாம் பதுக்கி வைக்கப்பட்டு இருக்கின்றது என்பது குறித்தும் அதற்கான காரணங்கள் குறித்தும் விசாரிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.ரஷ்யா, உக்ரைன் இடையே ஏற்பட்டுள்ள போர் காரணமாக ஐரோப்பிய சந்தையில் ஒரு புறம் சுணக்கம் ஏற்பட்டுள்ள நிலையில் , மறுபுறம் பஞ்சின் அதிகப்படியான விலையேற்றமும், இதை தடுக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது கோவையின் பஞ்சாலை தொழிலை தடுமாற வைத்துள்ளது.
குறிச்சொற்கள்: