சென்னைத் துறைமுகம்
சென்னைத் துறைமுகம்
சென்னை மாநகருக்கென்று பல சிறப்புகள் உண்டு. அதில் குறிப்பிடத்தக்க ஒன்று சென்னை மாநகரின் மிகப் பழமை வாய்ந்த துறைமுகம். இந்தியாவின் மிகப்பெரிய துறைமுகங்களில் மும்பைக்கு அடுத்தபடியாக இரண்டாம் இடத்தை வகிக்கும் இத்துறைமுகம், பல விதங்களில் சிறப்பு வாய்ந்தது.
தென் இந்தியாவின் நுழைவாயில் என்ற பெருமை சென்னைக்கு கிடைக்க இந்த துறைமுகம் தான் காரணம். மேலும், தென்இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு ஒரு முக்கிய காரணியாக இது விளங்குகிறது. இந்தியாவில் உள்ள 12 துறைமுகங்களில் 3வது பழமையான ஒன்றாக திகழும்.
இது 125 வருடங்களுக்கு மேலாக பயன்பாட்டில் உள்ளது. எனினும், 1639ம் ஆண்டிலிருந்தே இங்கு கடல் வழி போக்குவரத்து துவங்கிவிட்டதாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். வருடம் முழுக்க, நான்கு காலநிலைகளிலும் இயங்கும் இந்த செயற்கை துறைமுகம், முதலில், பயணிகள் போக்குவரத்துக்கு மிகுந்த முக்கியத்துவம் பெற்று விளங்கியது.
மலேசியா, சிங்கப்பூர் மற்றும் பல ஆசிய நாடுகளோடு பயணிகள் போக்குவரத்தே இங்கு மும்முரமாக நடந்து வந்தது. பிறகு சிறிய அளவில் சரக்கு ஏற்றுமதி தொடங்கி, நாளடைவில், மிகப் பெரிய சரக்கு போக்குவரத்தைக் கையாளும் திறன் கொண்டதாக இத்துறைமுகம் தன்னை மாற்றிக் கொண்டது. பண்டைய காலத்தில் இருந்தே இந்த துறைமுகம் மக்கள் பயன்பாட்டில் இருந்து வந்துள்ளது.
பல்லவர்கள், சோழர்கள், பாண்டியர் மற்றும் விஜய நகர அரசுகள் இந்நகரக் கடற்கரையை தங்களது கடல் வழி போக்குவரத்துக்கு பயன்படுத்தி உள்ளனர். குறிப்பாக ஆறாம் நூற்றாண்டில் இருந்து ஒன்பதாம் நூற்றாண்டு வரை தென் இந்தியாவை ஆண்ட பல்லவர் காலத்தில் தற்போது, சென்னையின் முக்கியப் பகுதியாக விளங்கும் மயிலாப்பூர் மேலியாப்போர் என்று அழைக்கப் பெற்றதாகவும் உறுதியான தகவல்கள் ஆய்வாளர்களால் முன் வைக்கப்படுகின்றன.
ஆனால் ஆங்கில ஆட்சியின் போது தான், இத்துறைமுகம் மிகப்பெரிய அளவில் உருவாக்கப்பட்டு உலக அளவில் பிரசித்தி பெற்ற ஒன்றாக அமைந்தது. இப்போது, சென்னை துறைமுகத்தின் கப்பல் நிறுத்தும் இடங்களில் கடலின் ஆழம் 17 மீட்டர் (56அடி) வரை உள்ளது. இதனால் நான்காம் தலைமுறை கப்பல்கள், அதாவது, நவீன சொகுசுக் கப்பல்கள், போர்க் கப்பல்கள், போன்றவை இந்த துறைமுகத்தில் வந்து செல்லும் வசதி உள்ளது.
கடல் வழி பயணிகள் போக்குவரத்துக்காக, இந்திய கப்பல் கழகம் கண்டறிந்த ஐந்து துறைமுகங்களில் சென்னையும் ஒன்று. கோவா, கொச்சின், மும்பை மற்றும் மங்களூர் போன்றவை மற்ற நான்கு பயணிகள் போக்குவரத்து நடைபெறும் துறைமுகங்களாகும். கடந்த 100 ஆண்டுகளாக, சிங்கப்பூர், மலேசியா, மணிலா, சூயஸ், ஏடான், கொழும்பு மற்றும் லண்டன் போன்ற அயல்நாட்டு நகரங்களுக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து சென்னையில் இருந்து நடந்து வந்திருக்கிறது.
1984 வரை சென்னை சிங்கப்பூர் பயணிகள் கப்பல் போக்குவரத்து நடைபெற்று வந்துள்ளது என்ற தகவல் ஆச்சிரியத்தை அளிக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் பத்துக்கும் மேற்பட்ட பயணிகள் சொகுசுக் கப்பல்கள் சென்னைத் துறைமுகத்தைத் தொட்டுச் செல்கின்றன. சென்னைத் துறைமுகம் பழமை வாய்ந்தது என்ற பெருமையோடு நிற்காமல், அதை உலகத்தரத்தோடு மற்ற முன்னேறிய நவீன துறைமுகங்களோடு போட்டி போடும் நிலையை மத்திய அரசு உருவாக்கினால், அது தமிழகம் மட்டுமல்ல மொத்த தென் இந்தியாவுக்கும் நன்மை பயப்பதாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
குறிச்சொற்கள்: